Saturday 16 April 2016

அரசியல் கட்சிகளின் அரசியல்

சில நிகழ்வுகள் நம் எல்லோர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். பலரிடம் அந்த நிகழ்வுகளை குறித்து உரையாடுவோம், விவாதிப்போம் எனினும் விடை என்னவோ மீண்டும் ஒரு கேள்வி தான். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?. அந்த கேள்வியின் தொடர்ச்சியாக இன்னும் பல புதிய கேள்விகள் துளிர்த்து எழும். இந்த கேள்விகள் ஒரு சுழர்ச்சி போல கீழே வரும் மீண்டும் மேல் நோக்கி எழும். வேகம் அதிகமாகும் குறையும் ஆனால் சுழர்ச்சி நிற்காது. அரசியலில் அதுவும் தமிழக அரசியலில் நிகழும் பல நிகழ்வுகள் நம் சிந்தனையை இப்படி ஒரு கேள்வி சுழர்ச்சிக்குள் தள்ளுபவை தான். அந்த பல கேள்விகளுள் என்னை படு வேகமான ஒரு கேள்வி சுழர்ச்சியில் சுற்ற வைத்துக் கொண்டிருப்பது இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு சாமாணிய மனிதர்கள் அளிக்கும் ஈடு இணையற்ற ஆதரவு.

இந்த சந்தேகத்தை நான் எழுப்புகையில் பலருக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ அம்மாவை பற்றி தான். ஆம், அவரது பல வருட கால அரசியல் வாழ்வில் அவர் கடந்த பல தடைகளுள் அவர் இப்பொழுது கடக்கயிருக்கும் தடை மிக கடிணமானது. அவரது விடுதலை தேசிய அரசியலில் அவருக்கு இருந்த பலத்தை எடுத்துக்காட்டியது (விரிவாக விவரிக்க தேவை இல்லை என எண்ணுகிறேன்). தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பெரும் வியப்பை எனக்களிக்கவில்லை மாறாக அவர் மீது சாமாணியர்கள் காட்டும் அன்பு தான் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்படி நான் சொல்லும் போது பலரின் மனதில் எழும் ஐயம் என் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அது என்னவெனில் அம்மாவின் மீது அவர்கள் தொண்டர்கள் காட்டுவது அன்பா ? இல்லை அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமா ?.

அரசர்கள் காலத்து ஆட்சிக்கு பிறகு நாம் பல்வேறு அரசியல் தலைவர்களை கண்டிருக்கிறோம். காந்தி கையசத்து "அஹிம்சை முறையில் போராடுவோம்" என்றதும் கோடிக்கணக்கானோர் நாடு முழுவதும் அவர் பின்னே திரளாக சென்றனர். "இளைஞர்களே நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து ஆயுத போராட்டம் செய்யுங்கள். விடுதலையை நாம் பெருவோம்" என்றதும் அவர் பின்னும் பலர் சென்றனர், உயிர் தியாகம் செய்தனர். கர்ம வீரர் காமராஜரோ அவரின் எளிமையான திறமையான அரசியலின் மூலம் பலரின் மாண்பை பெற்றார். பல தொண்டர்கள் அவரை கடவுளாகக் கருதி பணி செய்தனர். பக்தவச்சலம், கக்கன், ராஜாஜி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த காலத்தில் அப்படி ஒரு நிலை உள்ளதா என்று எண்ணிப் பார்த்தால் பலர் எந்த தயக்கமுமின்றி இல்லை என்றே பதிலளிப்பார்கள். அப்படியென்றால் அரசியல் தலைவர்கள் மீது தொண்டர்கள் அன்பு காட்டுவது போல் நடித்து அவர்களுக்கு வேண்டியவற்றை அடைகின்றனர் என்றே தோன்றுகிறது. அனைவருமே பொய்யர்கள் என்று கூற இலயாது என்றாலும் பெரும்பாலும் பொய்யர்கள், சுயநலம் பிடித்தவர்களே.

இந்த மாற்றம் அரசியலில் அதுவும் நம் தமிழகத்தில் எப்பொழுது நடந்தது என்றே தெரியவில்லை. அது என்னவென்றால், இப்பொழுது அரசியல் கட்சிகளில் தொண்டர்களாக இருப்பவர்கள் "மாபெரும் கொலைகாரர்கள்", "திருடர்கள்" "ஏமாற்றுக்காரர்கள்" என்று பார்ப்பவர்கள் அனைவருமே தனக்கென்று ஏதோ ஒரு ஆதாயம் தேடியே அரசியல் கட்சிகளுக்குள் நுழைகிறார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்கவே இயலாது. ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் காட்சிகளை பிபிசி நேரலையில் ஒளிபரப்பியதை கண்டபோது வியந்தேன், அங்கு ஓட்டுச் சாவடிக்கு அருகே ஒரு சிலர் கூடி பேசிக் கொண்டிருந்தனர் அவர்களை பிபிசி பேட்டி எடுத்த போது அவர்கள் அளித்த சில பதில்கள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது. அவர்களில் சிலர் "ஜான் கெர்ரி" ஆதரவாளர்கள் சிலர் "ஜார்ஜ் புஷ்" ஆதரவாளர்கள் ஒரு சில சாமாணியர்களும் இருந்தனர். அவர்கள் வெளிப்படையாக போட்டியிடும் தலைவர்களை விமர்சித்தனர். ஆனால், யாரும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஒருவரிடம் இருந்து வந்த விமர்சனத்தை மற்றொருவர் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். இங்கோ ஒரு "ஏரியா கவுண்சிலர்" பற்றி விமர்சித்தாலே என்ன ஆகுமென்று அறியாதோர் இல்லை.

நம் நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் ஓட்டு பதிவாகும் சதவிகிதம் 60%ல் இருந்து 70% கடக்கத் திணறுவதைக் காணமுடிகிறது. ஓட்டு போடாதவர்கள் சோம்பேரிகள், இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையோ ஆர்வமோ எள்ளளவும் இல்லாதவர்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் ஒன்று தானே என்று கருதுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைமை சீர்கெட்டுப் போயிருப்பது உண்மை. அதன் விளைவாக தான் இப்பாடி எல்லம் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். அதற்காக அவர்கள் தொடர்ந்து செய்யும் செயல்கள் தான் இவை. நாட்டில் உள்ள அனைத்து கெட்டவர்களின் குடியிருப்பாகவே மாறிவிட்டது அரசியல் கட்சிகள் அவர்களை வைத்து தான் அரசியலே நடத்துகிறார்கள் அப்படி அவர்களை வைத்து அரசியல் கட்சி தலைவாகள் செய்வதென்ன?...இந்த நாட்டின் அரசியலில் நுழைந்து மக்களுக்கு நல்லது செதுய்விடுவோம் என்று எண்ணும் அனைவரையும் அடுத்த அடியையே எடுத்து வைக்க இயலாதவாறு முடக்குவேதே இவர்களது வேலையாக உள்ளது. மக்கள் மாற்றத்தை வேண்டி காத்திருக்கிறார்கள், இப்பொழுது தமிழ் நாட்டில் கோலோச்சும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை, நல்லது செய்ய விழியும் கட்சியை ஆதரிக்க தயாராகவே உள்ளனர் ஆனால், மாற்றாக தோன்றுபவர்களை வளர விட்டால் தானே மக்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டும். ஒரு செடிகயை வளர விடாமல் வெட்டி எறிந்தால் அவை எவ்வாறு மரமாகும்?. அதை தான் இந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் அவர்கள் தலைவர்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக உள்ளது.

ஆங்கிலத்தி "Mutual benefit"என்று சொல்லுவார்கள் அதாவது, உனக்கு ஒரு லாபம் எனக்கு ஒரு லாபம். அரசியலில் இப்பொழுது நிகழ்வதெல்லாம் இப்படிப்பட்ட ஆதாய பகிர்வுகள் தான். இதற்கு இந்நாட்டின் ஏழ்மையும் ஒரு முக்கிய காரணமாக அமைகறது. ஏழ்மையில் இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசிய்வாதிகள் மாறாக தவறான வழிகளைக் காட்டுகிறார்கள். அவர்கள் செய்து கொடுக்கும் சில வேலைகளில் கிடைக்கும் பணத்துக்கும் சிறு புகழ்ச்சிக்கும் நன்றியாக நடந்து கொள்கிறார்கள். இவர்களே இப்போதைய அரசியல் கட்சிகளின் எதிர்கால தூண்களாகம் மாறிப்போகிறார்கள். இவற்றை அம்மாவோ ஐயாவோ நேரடியாவா வந்து செய்ய இயலுமா ? இல்லை, இயலாதல்லவா. இப்படி சமூகத்தின் மேல் தங்களுக்குள்ள ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள சாமாணிய மனிதர்களையே பயன்படுத்துகின்றனர் அரசியல் கட்சிகளின் பெரும்புள்ளிகள். இப்படி அரசியல் கட்சிகள் சராசரி மனிதர்களை தூபம் போட்டு பெரும் கொலைகாரர்களாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவும் உருவாக்கி அவர்களுக்கு "நாய் பிஸ்கட்" போல் அவ்வப்போது சிலவற்றை தூக்கி போட்டுவிட்டு அவர்கள் அனைவரின் பெரும் துணையுடன் உச்சத்தில் உள்ளனர்.

மொட்டை போடுகிறார்கள், கோயில் கோயிலாக சென்று பூஜை செய்கிறார்கள், மண் சோறு உட்கொள்ளுகிறார்கள் இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். மேலிடத்தின் பார்வையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை விட இது வேறு எதையும் காட்டவில்லை. இப்பொழுது பெரும் தலைவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பெரும்பாலான தலைவர்களுமே பல வருடங்களுக்கு முன் சிறு சிறு ரவுடித்தனம் செய்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அப்படி இருக்கும் சிலர் நாளை இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களானால் அது ஒன்றும் பெரும் வியப்பை அளித்து விடாது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் போது எந்த துறையிலும் முழுமையான முன்னேற்றம் என்பது இருப்பது கேள்விக்குறி தான்.

- ஒன்று பணம் புகழ் என்று அங்கலாய்க்கும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், அடுத்தக் நிலை தலைவர்களும் திருந்த வேண்டும்

- இல்லையேல் அரசியல் கட்சிகளால் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக அவர்களுடன் இணைந்து செயல்படும் சாமாணியர்கள் திருந்த வேண்டும்.


- அதுவும் நடக்காது போனால், வீணே அரசியல்வாதிகளை குறை கூறாது குறயுள்ள அரசியல்வாதிகளை எதிர்க்க நல்லவர்வள் அரசியல் செய்ய முன்வர வேண்டும்

இதில் ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் கூட நம் நாடு பிழைத்துக் கொள்ளும். இல்லையேல் ஒவ்வொரு முறை ஆதிக்க சக்திகளின் கொடுமை எல்லைகளை மீறும் போது மக்கள் புரட்சி வெடிப்பது போல் ஒரு புரட்சி இங்கும் வெடித்தால் தான் இதற்கெல்லாம் விடிவு காலம்.

நம் நாடு நல்வழியில் பயணிக்க அப்படியொரு புரட்சி தேவைப்படாது என்று அன்ழிவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம் மாற்றத்தை எதிர்நோக்கி.

- ராஜேஷ் சுப்பிரமணியன்

No comments:

Post a Comment