Sunday 12 February 2017

ஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் ?

அனைவருக்கும் ஒராங்குடானின் பணிவான வணக்கங்கள்

சில நாட்களுக்கு முன் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஓர் அடுக்கு மாடி கட்டடத்தில் வசித்து வந்த குடும்த்தில் உள்ள 7 வயது சிறுமியை ஒரு மிருகம் சிதைத்து பின் எரித்து கொன்றிருப்பது மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வானது. கேட்பவர்கள் நமக்கே இப்படி பதறுகிறதே, அந்த பிள்ளையை பெற்றவர்களும் உறவினர்களும் எப்படி கதறி இருப்பார்கள் ? இந்த பேரிழப்பிலிருந்தும், மன சோர்விலிருந்தும் அவர்கள் மீண்டு எழ நீண்ட காலமாகும்.



இது குறித்து இணையத்தில் குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக Facebook மற்றும் Twitterல் மக்கள் கொந்தளிப்போடு சில கேள்விகளை வைக்கின்றனர். அவை,

1. நிர்பயா, சுவாதி போன்றோருக்கு மட்டும் தான் பொங்குவீர்களா ?

2. நிந்தினி போன்ற கீழ் சாதி பெண்களுக்கு மட்டும் நீதி கேட்கும் கூட்டத்தை என்னவென்று சொல்ல ?

ஒன்று வாழ்க்கை தரம் & சாதி/மதம் சார்ந்த காரணத்தால் சில நிகழ்வுகள் மீடியாவின் பார்வையில் விழுந்து பின் மக்கள் கையிலெடுக்கும் ஒரு இணைய போராட்டமாக மாறுகிறது.

நல்லது தான்,  குற்றங்களைக் கண்டு மக்கள் கொதித்து எழுவதும் போராடுவதும் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று தான். ஆனால், பெரும்பாலான மக்கள் இதிலும் ஆட்டு மந்தைகள் போல் தான் இருக்கின்றார்கள் என்பது தான் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. ஏன் கீழ் சாதியில் அநீதி இழைக்கப்பட்ட ஒருவருக்கு குரல் கொடுத்த எவரும் இதற்கு கொடுக்கவில்லை அதற்கு கொடுக்கவில்லை என்று யாரோ சிலர் கேட்க துவங்கியதும் தானும் கூட்டத்தோடு கூட்டமாக கிளம்பி விடுகின்றனர் ஞாயம் கேட்க. அவர்களுக்கு சரியாக என்ன வேண்டுமென்று கூட தெரியாது. அவர்களுக்கென்று தெளிவான கருத்தும் அந்த நிகழ்வு குறித்து இருக்காது.

ஏன் நீதி கேட்கிறோம் :
மக்கள் ஏன் நீதி வேண்டுமென கேட்க வேண்டும் ?

நாட்டில் எத்தனையோ குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை பெற செல்லும் அரசு அலுவலகங்களில் கூட லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் பொங்காத மக்கள், நீதி கேட்காத மக்கள் இதற்கு மட்டும் ஏன் கேட்கின்றனர் ?

சரி விடுங்கள், Doordarshanல் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் ஆனாலும் நாம் தனியார் தொலைக்காட்சிகளைத் தானே பார்க்கிறோம். அது ஒரு பெரிய விவாதம், மனிதர்களின் உளவியல் சார்ந்த விவாதம், மிகவும் ஆழமாகச் செய்ய வேண்டிய விவாதம். இப்பொழுது அதற்குள் போக வேண்டாம்.

பொதுவாக நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுகின்ற போது தான் நீதி கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். சல்லிக்கட்டு, நந்தினியின் கற்பழிப்பு & கொலை போன்ற சம்பவங்களில் மக்கள் நீதி கேட்டதும் அதை வைத்து தான்.

நந்தினி & ஹாசினியின் கற்பழிப்பு/கொலையின் வேறுபாடுகள்:
நந்தினியின் கற்பழிப்பு & கொலை எப்படி சிறுமி ஹாசினியின் கற்பழிப்பு & கொலையிலிருந்து வேறுபட்டு நிற்கிறது ?

ஒரு குற்ற செயலுக்கு நீதி எப்பொழுதெல்லாம் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்த்தால் அது இரண்டே காரணங்களால் தான்,

1. பதவி/பணம்/செல்வாக்கு படைத்தவர்கள் குற்றம் இழைக்கும் போது

2. ஆதிக்க நிலையில் இருப்பகள் இழைக்கும் குற்றங்களில் (மதம், சாதி, இனம் என்று இதனை மேலும் வகைப்படுத்தலாம்)

நந்தினியை, காதலித்தவன் & அவனது நண்பர்கள் கூடி வன்புணர்வு செய்து பின் கருவறுத்து, புதைத்ததை மட்டுமே பார்க்க கூடாது, இந்த கொடூரத்தை நிகழ்த்த அந்த மிருகங்களுக்கு தைரியத்தை கொடுத்தது எதுவென்று சற்றே சிந்தித்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் ஏற்கப்படவில்லை (முதலில் கொடுத்த புகாரும் ஏற்கப்படவில்லை பின் இந்து முன்னணியின் மணிகண்டன் இதை செய்திருக்கக் கூடுமென்று புகாரளித்தும் காவல்துறை ஏற்கவில்லை), அந்த பெண்ணை தேடுவதற்கான சிறு முயற்சியை கூட காவல் துறை மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவத்தில் சில அதிகாரம் படைத்தவர்களின் கை இருப்பது அறிந்தே அவர்கள் கண்டுகொள்ளாது இருந்ததை தெள்ளத் தெளிவாக காட்டியது. அங்கு தான் சமூக செயல்பாட்டாளர்கள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். மற்றொரு திசையிலிருந்து வரும் அழுத்தம் காவல்துறையை செயல்பட வைக்கிறது. சில நாட்களில் நந்தினியின் பிணம் நிர்வாண நிலையில் கிடைக்கிறது.

இந்த சபவத்தில் நந்தினிக்கு நீதி வேண்டி போராடாமல் போயிருந்தால் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க இயலவில்லை என்று சில வருடங்கள் கழித்து காவல்துறை வழக்கை மூடி இருக்கு.

சிறுமி ஹாசினியின் கற்பழிப்பு & கொலை முற்றிலும் வேறுபட்ட சம்பவம். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறை விரைவில் கொலையை செய்த கொடூரனை கைது செய்கிறது. அவனை நீதி மன்றத்தில் நிறுத்துகிறது, அவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்குகிறது. இதில் நீங்களோ நானோ எதற்காக போராடப் போகிறோம் என்று தெரியவில்லை. கேட்டால் தண்டனைகளின் தீவிரம் அதிகரித்தால் தானே குற்றங்கள் குறையும் என்று மேலோட்டமாக கூட சிந்திக்காமல் ஒரு பதிலைச் சொல்லி விடுவர்.

அதை பற்றியும் பேசுவோம்....

கற்பழிப்பும் தண்டனையும்:
குற்றம் என்பதை குற்றமாகவே பார்ப்போம். கற்பழிப்பு என்ற உடனேயே நாம் வேறு நிலைக்கு சென்றுவிடுகிறோம். பெண்ணிற்கு இழைக்கப்படும் குற்றமென்றும், இதற்கு தகுந்த தண்டனையை வழங்காமல் விட்டால் இது நீடிக்குமென்று கிளம்பிவிடுகிறது ஒரு கூட்டம்.

மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சட்டங்கள் இயற்றி, குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை வகுத்ததே மனிதன் பண்பட்ட நிலையை அடைந்த பின் தான். அதற்கு முன் அவன் இலக்கணமற்ற காட்டுத்தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்திருக்கிறான். அதன் பின் இருந்த/தோன்றிய பல குற்றங்களை களையவும் மனிதன் சட்டம் மட்டுமில்லாமல் பிற மாற்றங்களையே பெரிதும் நம்பினான். உலகப் போர்கள் நடந்து கொண்டிருந்த காலங்களில் கூட சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் இருக்கவே செய்தன ஆனால், அவற்றை இன்னொரு போரின் மூலம் நாம் கட்டுப்படுத்தவில்லை மாறாக ஐ.நா சபையை நிறுவி இவ்வுலகம் மனிதன் நீடித்து வாழ உரியதாக மாற்றவில்லையா ? அது போல தான் குற்ற சம்பவங்களில் சட்டம் மட்டுமே அனைத்தையும் சரிகட்டிவிடுமென முடிவு செய்யாமல் மற்ற வழிகள் என்னவென்பதையும் காண வேண்டும். 

சரி, தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அப்படி நடக்கிறதா என்று கவனித்தீரா ?

நிர்பயா வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அந்த சம்பத்தில் வந்த தீர்ப்பு இந்த நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் வாழும் மனிதர்களுக்கு கூட தெரியும், ஆனால், அதற்கு பின் நிகழ்ந்த குற்றங்கள் என்னென்ன என்று அறிவீரா?

நிர்பயா கற்பழித்து கொலை செய்த வழக்கில் தீர்ர்பு கொடுத்த பின் நிறைய கொடூரமான கற்பழிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதே டில்லியில் ஹாசினியைவிட வயதில் சிறியவளான ஒரு பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றிருக்கிறான் ஒரு பாவி. இன்னும் பல கொடூர கற்பழிப்பு/கொலைகள் நிர்பயா சம்பவத்திற்க் பின் நிகழ்ந்துள்ளன. அந்த குற்றச் செயல்களை செய்தவர்கள் யாரும் இந்த குற்றத்தை செய்தால் எனக்கென்ன தண்டனை கிடைக்குமென்று தெரியாதவர்களா என்ன ? நன்றாகவே தெரியும். ஆனாலும் ஏன் செய்கிறார்கள் ?

தண்டனை என்ன என்பதை விடுங்கள், ஒரு குற்றம் இழைத்துவிட்டால் நாம் எளிதில் தப்பிவிடலாம் என்று எண்ணுவோர் இருக்கின்றார்களா இல்லைய ? அரசியல் பலம், பண பலம் & பதவி இதை எல்லாம் வைத்துக்கொண்டு நீதியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இன்னமும் ஒரு குற்றமும் செய்யாதவர் போல் இச்சமூகத்தில் நம்முடன் கையில் ரத்தக் கரை படிந்தவர்கள் எத்தனையோ பேர் உலவிக்கொண்டுள்ளனர்.

இன்று இணையத்தில் பொங்குவோருக்கு காரைக்காலில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கூட்டு வன்புணர்வு நினைவிருக்கிறதா என்று கூட தெரியவில்லை. எப்படி தெரியும் ? நீங்கள் தான் கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்து கும்மியடித்துக் கொண்டு இருக்கிறீர்களே. அந்த சம்பவம் மிகுந்த அரசியல் பலம் கொண்ட நாய்கள் கூடி செய்த செயல். அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட்டனரா அல்லது இன்னும் சுதந்திரமாக திரிகின்றனரா என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. குற்றம் இழைத்தவனை முதலில் பிடித்தால் தானே தண்டனை கொடுக்க இயலும்.

உற்று நோக்குங்கள், நாம் அதிகரிக்க வேண்டியது தண்டனையையா அல்லது அதிகார பலமிருக்கும் திமிரில் குற்றம் செய்வோரை எப்படி அடக்குவது என்ற எண்ணத்தின் மீதான தீவிரத்தையா ? மக்கள் பொருப்பாக நடந்துகொள்ளும் ஒரு சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்கலாம். அது இன்னொரு பெரிய விவாதம். அதை நான் இங்கு எடுத்து பேச வேண்டாமென்று நினைக்கிறேன்.

இதையும் மீறி சிலர் கற்பழிப்பவனின் ஆணுறுப்பை அறுத்தெறிய வேண்டும், நடுத் தெருவில் தூக்கிலிட வேண்டும், கல்லாலடித்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்குள் இருக்கு மிருகத்தை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க பல கேவலமான வேலைகளை செய்யும் ஆதிக்க சக்திகளை நம்மால் வேரோடு பிடுங்கி எறிய முடியுமா ? அது நடக்காத வரை நீங்கள் தண்டிப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் செய்துவிடும் குற்றச் செயல்கள் & சில மனநிலை சீர்கெட்ட பைத்தியக்காரர்களாக மட்டுமே இருக்கும். ஆனால், குற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த ஆதிக்க சக்திகளை எந்த சட்டத்தாலும் தண்டித்துவிடவே இயலாது. அவர்கள் செய்யும் குற்றங்கள் உங்கள் பார்வைக்கே வராது. ஆனால், அவர்கள் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி பலர் நாசமாகிக் கொண்டு தான் இருப்பார்கள். கடுமையாக்கப்படும் தண்டனைகள் சிலரை மட்டுமே சென்றடையும்.

குற்றங்களை குறைப்பதெப்படி? :
குறை சொல்லும் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் ஒரு ஆண்/பெண் பொது வாழ்வில் ஈடுபடுவதை அனுமதிக்கிறீர் ? பின்பு அரசியல் & நிர்வாகத்தை பொறுப்புடன் ஏற்று நடத்தும் நல்லவர்கள் யார் ? அன்று இருந்த பொறுப்புணர்வு மக்களிடையே இப்பொழுது இருக்கிறதா ? 

அரசியல் & நிர்வாகத்தில் நல்லவர்கள் நிரப்ப வேண்டிய இடங்கள் காலியாகவே இருக்கின்றன. சமூக விரோதிகள் பார்த்தார்கள், அவ்விடங்களை தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும், பணம்/பதவி சம்பாதிக்கலாம் என்று தாங்களே நிரப்பிவிட்டார்கள். மதம், சாதி, பணம் என்று எத்தனையோ குழுக்களில் அந்த ஆதிக்க சக்திகள் அரசியலிலும் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கின்றனர். எப்படி குற்றம் செய்பவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் ?

அரசியலில் வேரிலிருந்து முன்னேறி செல்லப் போவது யாரென மக்கள் தீர்மாணித்து நல்லவர்களை அடிப்படையிலேயே ஆதரித்தால், வளர்த்தால், காத்தால் ஆதிக்க சக்திகளை பெருமளவு அடக்கிவிடலாம். பின்பு தண்டனைகள் சரியாக வழங்கப்படும், அச்சத்தில் பெரிதளவு குற்றங்கள் குறையும்.

சிலர் தன்னை அறியாது ஒரு வேகத்தில் செய்துவிடும் குற்றங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் & சமூகம் பிள்ளை வளர்ப்பில் காட்டும் ஆர்வம் மற்றும் அதில் புகுத்த வேண்டிய மாற்றங்களை பற்றி சிந்தித்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். இப்பொழுதெல்லாம், உஷாரா இருந்துக்க, ஏமாளியா இருக்காத, எவனுக்கும் உதவாத, இப்படி எல்லாம் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகளிடமிருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர் ? சமூகம் சிலவற்றை அணுகும் முறையை மாற்றினாலே நல்ல பல மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வர இயலுமென்பதை மக்கள் உணர வேண்டும்.

ஹாசினிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு சட்டம் கடுமையான தண்டனையை வழங்கிவிட்டால் பின்பு குற்றம் குறைந்துவிடும் என்று பேசுபர்கள் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்பது நலம். இவனை போன்றோரை தண்டனையை கடுமையாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தவே இயலாது. ஒரு நொடிப்பொழுதில் தனை இழக்கும் மனபிழற்சி (அப்படி என்றால் பைத்தியக்காரன் அல்ல) ஒருவனை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம். அப்பொழுது நாம் இதை செய்தால் தண்டனை கடுமையா இருக்குமென்று அவன் சிந்திக்க மாட்டான். பிள்ளை வளர்ப்பு, சமூக பொறுப்புடன் இயங்கும் மக்கள், நல்லாசிரியர்கள், நல்லவற்றை பேசும் உறவுகள் என்று இவையனைத்தும் சேர்ந்து கொண்டுவர வேண்டிய மாற்றமிது.

இதையெல்லாம் செய்துவிட்டால் குற்றங்கள் நடக்காமல் இருக்குமா என்று கேட்டால் நடக்கும் என்று தான் கூற இயலும். ஆனால், குற்றங்கள் பெருமளவு குறைந்துவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.




எல்லா குற்றங்களைப் பற்றியும் பேச வேண்டும், நீதி கிடைக்காது என்று தெரிந்தால் தொடர்ந்து நீதி கேட்க வேண்டும். ஆனால், குற்றங்கள் அனைத்திற்கும் தண்டனைகள் கடுமையாக்குதல் ஒன்றே தீர்வு என்று எண்ணி ஏமாந்துவிடாதீர்.



- நன்றி

- ஒராங்குடான்



Saturday 7 January 2017

வாழ்வின் தேடல்களும் புத்தகங்களும்



அனைவருக்கும் ஒரங்குடானின் பணிவான வணக்கம்.

இப்பதிவில் புத்தகங்களை நாம் வாசிப்பதினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி எனது பார்வையிலிருந்து எடுத்துரைக்க விழைகிறேன். வழக்கமாக புத்தகங்கள் படிப்பது நல்லது, பொது அறிவை வளர்க்கு, அது உங்கள் நண்பன் என்றெல்லாம் எப்பொழுதும் போல ஆழமாய் சிந்தித்து கூறாது, நுணிப்புல் மேய்ந்துவிட்டு நானும் சிறுவர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கிவிட்டேன் என்று பெருமிதம் அடைவர். இப்படிப்பட்ட (Stereotypeஆன) விளக்கங்களை கொடுப்பதனால் புத்தக வாசிப்பு என்பது துவக்கத்திலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டுவிடும் என்பதை உணராது.

1. தேடலின் துவக்கம்:

குழந்தைகள் பிறந்து அவர்கள் வாய்விட்டு பேச துவங்குவதற்கு முன்னதாகவே அவர்களிடம் நாம் பேச துவங்கிவிடுகிறோம். நாம் பேசும் போது நமக்கு பதிலளிக்காத இளம் பிள்ளைகளோடு உரையாடுதலுக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் ரத்தத்தில், மரபணுவில், உணர்வில் ஊறிப்போயிருக்கும் ஒரு மொழியினை அவர்கள் மூளைக்கு கொண்டு சென்று பேச்சை தூண்டவேயாகும். இதுவே குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் முதல் மிகப்பெரிய உளவியல்/மூளை பயிற்சியாகும்.

பிறந்ததிலிருந்தே குழந்தைகள் மூளையில் இருக்கும் ஒரே விடயம், "கேள்விகள்". அவர்கள் பார்ப்பவற்றில் எல்லாம் பல நூறு கேள்விகள் அவர்களிடம் இருக்கும். பேசும் திறன் தூண்டப்பட்டு அவர்கள் பேச துவங்கியதும் அக்கேள்விகளுக்கு விடைகளை நம்மிடம் பெற முயற்சிப்பார்கள். இது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு துவங்குகிறது ஒர் மனிதனின் தேடல்.
Image result for Book reading kid
சரியோ தவறோ அறியேன், என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் பிறவியிலேயே சில அடிப்படை குணங்களோடு தான் பிறக்கிறான். அந்த அடிப்படை குணங்களை பொறுத்தே அவனுடைய தேடல்களும் வேறுபடுகின்றன. அந்த குணங்கள் சார்ந்த தேடல்கள் பருவ நிலையை அடையும் பொழுது தீவிரமடைவதை கூர்ந்து கவனித்தால் நம்மால் உணர இயலும். குழந்தைகள்/சிறுவர்களாக இருக்கும் போது நாம், வளர்ந்த உலக அனுபவமுடையோரிடம் கேட்டுப் பெறும் தெளிவு, 12/13 வயதிற்கு மேல் சற்றே விரிவடைய துவங்கும். அங்கு தான் அவர்கள் தங்களின் தேடல்களுக்கான விடகளை பல கோணங்களில் பெறத் துவங்குகின்றனர். புத்தகங்கள் அத்தேடல்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.

2. கேள்விகள் & தொடர் தேடல்கள்:

மனிதன் வாழ்க்கையை ஒரே சொல்லில் அடக்கிவிட வேண்டுமென்றால் அதனை "தேடல்" என்ற ஓரே சொல்லில் அடங்கச் செய்துவிட இயலும். முன்பு சொன்னது போல் தேடல்களில் துவங்கும் வாழ்க்கை இறக்கும் வரை எதையோ ஒன்றை தேடிக்கொண்டே தான் முற்று பெறவும் செய்கிறது. நம்மில் கேள்விகள் எழுவது இயல்பு அதற்கான தேடல்கள், விடைகள் பெறுதல் போன்றவை நம் கையில் உள்ளது. தேடல்களின் வேகம் & நாம் பெறும் விடைகளை பொறுத்தே நம் வாழ்வின் இனிமையும் கூடுகிறது.

Image result for QuestionsImage result for Questions


3. புத்தகங்கள், கேள்விகள், விடைகள் & விடைகளுள் கேள்விகள்:
இவ்வளவு தூரம் நான்சொன்ன அனைத்தையுமே இப்பொழு சொல்லவிறுப்பவற்றுடுடன் இணைத்துப் பாருங்கள்.

புத்தகங்கள், உங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடைகள், அவ்விடைகளிலிருந்து எழும் பல கேள்விகள் & பல புதிய கேள்விகள் என்று எண்ணற்ற விடயங்களை தன்னுள் அடக்கிய ஒன்று.

மேலே நான் கூறியதை ஒரு எடுத்துக்காட்டுடன் காணும் போது எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

Image result for Books
என்னையே ஒரு எடுத்துக்காட்டாக கொள்வோம். சிறு வயதிலிருந்தே என்னுள் ஒரு மிகப் பெரிய கேள்வி இருந்தது. அது, மக்கள் "கடவுள்" என்ற ஒரு கற்ப்னை உரு & மதங்களின் மீது கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கை மீதான ஐயங்களே.

முதலில் நான் கடவுள் இல்லை என்று எண்ணவே இல்லை ஆனால், ஏன் மனிதனுக்கு கடவுள் வேண்டும், ஏன் பல்வேறு உருவங்கள், மதங்கள் வேண்டும் என்று சரியாக கோர்த்து விளக்க கூட இயலாதவாறு மனதில் கேள்விகள் சிதறிக்கிடந்தன. பெரியவர்களிடம் கேட்டால் ஒன்று "சாமி கண்ணை குத்திவிடும்" அல்ல ஏதொ புரியாத கதைகளை சொல்லி என்னை சமாளித்துவிடுவார்கள். வளர்ந்த பின்பு எனது கேள்விக்கான விடைகளை பலவற்றுள் சிறிது சிறிதாக கண்டேன். அவற்றுள் புத்தகங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. அத்தேடலை நான் புத்தகங்களின் வழியே நிகழ்த்திய போது என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் மட்டுமல்ல, பல புதிய விடயங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

புத்தகங்கள் அளிக்கும் விடைகளுள் கேள்விகளும் உண்டு. எ.கா - "மதங்களை, நாத்தீகம் எழுதுவோர் ஏன் இவ்வாறெல்லாம் குறை கூறுகின்றனர் ?". ஒரு புத்தகத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு விடையானது, அதன் தொடர்ச்சியாக ஒரு சில கேள்விகளையும் எழுப்பும். பின், அக்கேள்விகளுக்கான தேடல் துவங்கும். அதற்கு கிடைக்கும் விடைகளிலிருந்தும் பல்லாயிரம் கேள்விகள் எழும். ஆகாவே, மனிதன் வாழ்க்கையின் அடிப்படையான தேடல் எனும் ஓன்றை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள, தொரடர்ந்து அதற்கு தீனி போட்டு அதனை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள புத்தகங்கள் பெரிதும் உதவுமென்று நாம் உணர வேண்டும்.

நான் ஒரே ஒரு எ.கா தான் கொண்டு விளக்கினேன். இதையே நீங்கள் ஆரிவியல், புவியியல், மொழி, கலாச்சாரம், உணவு என்று எந்த ஒன்றையும் வைத்து ஒப்பிட்டு பார்க்க இயலும். சில பிள்ளைகள் சிறு வயதிலேயே தங்களுக்கு கனிதத்திலோ, மொழிகளிலோ, விளையாட்டிலோ அல்ல வேறு எதிலாவது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட வயது வரும் போது அவர்களை புத்தகம் வாசிக்கும் வழக்கத்திற்குள் கொண்டு வருவது பெற்றோர் & ஆசிரியர்களின் கடமை. பின்பு அவர்களின் தேடல் அவர்களை சரியான புத்தகங்களிடம் அவர்களை கொண்டு சேர்க்கும்.

தொடர்ந்து சிந்திப்பது, சிந்தனைய துண்டுவது போன்றவை மட்டுமே மனிதனை பண்பட்ட ஒருவனாகவும், வாழ்வை அணுகும் முறையை மேன்மையடையவும் செய்யும்.

பற்பல புத்தகங்களை வாசிப்பீர், அடுத்த தலைமுறையினரை புத்தகம் வாசிக்க ஊக்குவிப்பீர், வாழ்வை பொருள் பொதிந்த ஒன்றாக ஆக்குவீர் & வாழ்க்கை பயணம் முற்று பெறும் வரை புத்தகங்களோடு ஒரு மாணவனாகவே வாழ்வீர்.

வாழ்த்துக்கள்.

- ஒராங்குடான்

Saturday 16 April 2016

தீபா"வலி" - 2015 தீபாவளியன்று எழுதியது

இத்துப் போன ஓலக் குடிச வானத்துல
நட்சத்திரம் போல பொத்த நூறு
நட்சத்திரம் வழியே நெலா பாத்துட்டே
பண்டிகைக்கு இன்னும் பத்து நாளிருக்க
தூக்கமில்லாம தவிக்கிது பிஞ்சிக ரெண்டும்

இந்த வருசமாச்சி வெடிக்க வேட்டு உண்டா ?
ரெண்டு மூனு இல்லைனாலும்
ஒத்த சட்டையாவது நமக்குண்டா ?
ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாத்துட்டு
ஒவ்வொரு நாளும் ஏக்கத்துலயே ஓடுது

வாங்குற சம்பளம் வயத்துக்கே போதல
ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ஆளுன்னு
ஊருக்குள்ள கடன் வாங்காத ஆளில்ல
இதுல தீபாவளிக்கு சட்டை ஏது ?
வெடிச்சி கரியாக்க வேட்டு ஏது ?

ஊருக்குள்ள எல்லா பயலுகளும்
விடிஞ்சதும் புதுத்துணி உடுத்தி
போட்டி போட்டு வேட்டு வைக்க
பெத்த புள்ளைங்க வெறிச்சி பாக்குறத
பாத்து பாத்து இத்தன வருசம் ஓடிப் போச்சி

சீட்டு கட்டி வந்த பணத்துல அப்பனால முடிஞ்சது
ஆளுக்கொரு மொளகா வெடி பையி
இனிப்பு கரம் அதுக்கு இதுக்குன்னு
செலவு போக மிஞ்சினது வெறுங்கையி
இதுல புதுத்துணிக்கு எங்க போயி கையேந்த

இருந்த ஒரு சோடி தோடு கடையில தூங்க
மூக்குத்திய வச்சி தீபாவளிய ஓட்டிறலாம்
எதுவுமே இல்லைனாலும் கறி ஆக்கி போட்டுறலாம்
எப்பவும் போல இந்த வருசமும் ஏமாந்த கவலையில
பிஞ்சிகளுக்கு கறிச்சாறுல சுவையும் தெரியல

எவன் வீட்டு வேடு சத்தம் பெருசுன்னு
அக்கம்பக்கத்துல போட்டி போட்டு வேட்டு போட
மொளகா வெடி சத்தம் எங்க கேக்க போவுதுன்னு
அண்ணனும் தம்பியும் ஆளுக்கொரு பக்கம்
அடுத்தவன் போடுற வேட்ட வேடிக்க பாத்தானுக

பொறந்த மேனியா குட்டி பயலுக ரெண்டு
வெடிக்காத வேட்டுகள பொறுக்கிச் சேத்து
வேட்டுகள்ல மருந்தெடுத்து காகிதத்துல நெறப்பி
நாலு மூலையிலயும் நெறுப்பு வச்சதுக
மருந்துல நெறுப்பு புடிக்க மின்னலாட்டம் ஒரு வெளிச்சம்

வெளிச்சத்த பாத்த வண்டுக ரெண்டும்
குதியாட்டம் போட்டு ஆடி முடிச்சதும்
அடுத்த தெரு போனானுக வேட்டு வேட்டைக்கு
ஒன்னுமே இல்லாத வாண்டுக ஆட்டத்த பாத்து
அண்ணன் தம்பிக்கு ஒதட்டோரமா கசியிது சிரிப்பு

அவனவனுக்கு போட்டுக்க துணி இல்ல
நமக்கு கசக்கி போட பழய சட்டை இருக்கு
ஆன வெடி குதிர வெடின்னு இல்லைனாலும்
நம்ம தகுதிக்கு ஊசி வெடியாச்சும் இருக்குன்னு
அண்ணன் தம்பி கண்ணும் மனசும் பேசிக்கிச்சு

நம்ம கையில இல்லாதது தான் நம்ம கவல
இன்னைக்கு கையில இருக்குறது எல்லாம் இன்பமின்னு
புரிஞ்சி போச்சி அண்ணன் தம்பிக்கு
இல்லாதத விட்டு இருக்குறத அனுபவிச்சி
இன்பமா கழிஞ்சது தீபாவலி

இனி எப்பவுமே இன்பம் தான....

கடவுளின் ஏஜென்டுகள்

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தூற்றுவது தவறென்று கொள்பவன். ஆனால், வாழ்வில் சில நிகழ்வுகள் நம்முடைய எண்ணங்களை, புரிதல்களை சற்றே சோதித்து பார்த்து விடுகின்றன. நான் மட்டும் தான் என் வீட்டில் கடவுள் நம்பிகை இல்லாதவன் மற்றபடி என் தந்தை, அம்மா, அண்ணன் & தங்கை என்று அனைவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே. சில சமயங்களில் அவர்கள் பரிகாரங்களுக்காக என்னை கோயில்களுக்கு அழைக்கும் போது மறுக்காமல் செல்வேன். நம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க அழகிய கட்டமைப்புகளை மிகுந்த பிரமிப்புடன் ரசித்துவிட்டு திரும்புவேன். இது வரை சென்ற எல்லா கோயில்களிலிருந்து திரும்பும் போதும் பெரிதும் பாதிப்புகள் இல்லாமல் தான் திரும்புவேன். ஆனால், சமீபத்தில் நான் திருச்சியிலுள்ள ஒரு பழம்பெரும் கோயிலுக்கு சென்று திரும்பும் போது நொந்த மனதுடனே திரும்பினேன். காரணம் கடவுளினின் பேரால் அங்கு நடக்கும் பகல் கொள்ளை தான். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எனக்கு ஒன்றை மட்டுமே விளக்கியது, "நாத்தீகம் பேசுபவனை விட, கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆத்தீகன் நாத்தீகனுக்கெல்லாம் பெரும் நாத்தீகன்" என்பதையே.

பொதுவாக இந்த ஏமாற்று வேலை மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த அச்சத்தை வைத்தே நடக்கிறது. அந்த அச்சத்தை அவர்களாலேயே சமாளித்து விட இயலுமென்றாலும், அவர்கள் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியின் உதவி இருந்தால் அந்த செயலை முடித்து விட யானை பலம் பெற்று விட்ட உணர்வை அடைகிறார்கள். அந்த கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்களே. இந்த கடவுள்களின் தேவைகளை பட்டியலிட்டு மக்களுக்கு காட்டுபவர்களே கோயில் பூசாரிகளும், ஜோதிடர்களும். கடவுளை கண்ணால் காண இயலாது என்பதால் அவர்கள் இந்த இரு மகா புருஷர்களின் வார்த்தைகள் அனைத்தையுமே அப்பட்டமாக நம்புகின்றனர். வாழ்க்கையின் மேல் மனிதனுக்கு இருக்கும் அச்சம் மற்றும் அதனை ஏதோ ஒரு வழியில் கடவுளுக்கு சொல்லி வழி காண்கிறோம் என்று சொல்லும் வீணர்களின் மீது உள்ள நம்பிக்கையே இந்த ஏமாற்று வேலை நடப்பதற்கான இரு காரணங்கள் என்று தோன்றுகிறது. இந்த இரு காரணங்கள் என் மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடந்தது. அதனை உண்மை என்று உணர்த்திவிட்டு போனது ஒரு நிகழ்வு. இப்பொழு அந்த நிகழ்வில் சம்மந்தப்பட்ட முதல் காரணியை பற்றி காண்போம்.

என் அண்ணனுக்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. அவனுக்கு இன்னும் மணம் முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் என் பெற்றோரை கொன்று கொண்டிருக்கிறது. இது அவர்களின் அச்சம். பல முயற்ச்சிகளுக்கு பின்னும் தோல்விகளை சந்தித்தவர்கள் ஒரு தனிப் பெரும் சக்தியின் உதவி கிட்டினால் அது நம்மை கை தூக்கி விட்டுவிடும் என்று நம்புகிறார்கள். இப்பொழுது அந்த ஏமாற்று வேலைக்கு தேவையான இரு பொருள்கள் தயாராக உள்ளனவா ? விடுவார்களா கடவுளின் ஏஜென்டுகள் ? இதில் முதல் ஏஜென்டாக வருபவர் ஜோதிடரே. என் அம்மா எங்கெங்கோ கேட்டறிந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் செல்கிறார். எல்லோரும் இந்த ஏமாற்று வேலையில் ஒரு இடத்தில் தன்னை தானே விவரமானவர் என்று எண்ணிக் கொள்கின்றனர். அது என்னவென்றால், ஜோதிடம் பார்த்துவிட்டு பரிகாரம் செய்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுக்காரனாம், ஒரு கோயிலுக்கு சென்று இந்த பூஜையை செய்யுங்கள் அவர்கள் கேட்கும் பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்பவர் மிக்க நல்லவராம். நானும் அப்படியே எண்ணினேன். ஆனால், ஏஜென்டுகளின் தொழில் ரகசியம் கோயிலுக்கு சென்ற பின் தானே தெரிந்தது.

அந்த ஜோதிட ஏஜென்ட் மருந்து எழுதிக் கொடுக்கும் சீட்டு போல இருந்த ஒரு காகிதத்தில் பூஜையின் விவரங்கள், பிள்ளையின் ஜாதக விவரங்கள் என்று அனைத்தையும் தெளிவாக எழுதிக் கொடுக்கிறார். அதில் அவரது பெயர், முகவரி கைபேசி எண் முதற்கொண்டு எல்லா விவரங்களும் இருந்தன. எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் தாமதமாகும் பெண், ஆண் இருபாலருக்கும் இந்த பூஜை நடக்கிறது என்று அவர் கூறியிருந்தார். நானும் என் அன்னை தந்தையின் ஆசையை கெடுப்பானேன் என்று அவர்களுடன் திருச்சி சென்றேன். கோயிலை சுற்றிலும் சாதாரண அரைகள், டீலக்ஸ், சூபர் டீலக்ஸ் அரைகள் கொண்ட ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன. கோயில்களிலேயே பணம் உள்ளவனுக்கு தனி வரிசை இருக்கும் போது வெளியே அரைகள் இருந்தாலென்ன என்று எனக்கு நானே சொல்லிச் சிரித்துக்கொண்டே அங்கிருந்த ஒரு ஹோட்டலில் இரு அரைகள் எடுத்து தங்கினோம். அன்று இரவு கோயிலுக்கு சென்று மூலவரை தரிசித்துவிட்டு பூஜை செய்ய வேண்டிய கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அப்பா சொல்ல அனைவரும் ஒப்புக்குண்டு சென்றோம். மூலவரை தரிசித்துவிட்டு அவர் சொன்ன கோயிலை தேடிக்கொண்டே அங்கிருந்த அனைத்து கோயில்களையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு சிறு கோயிலுக்குள் சென்றதும் எங்களை ஏற இறங்க பார்த்த பூசாரி "யாரு உங்க பசங்களா, கல்யாணமாயிடுத்தா?" என்று கேட்க என் அம்மா அசட்டு சிரிப்புடன் தலையை அசைத்து இல்லை என்று சைகையில் கூறீனார். "நாளைக்கு காலையில் வந்தேள்னா, நம்ம மூலவருக்கு பூஜைய பன்னிடுவோம், அடித்த ஒரு சில மாசத்துலயே புள்ளையாண்டானுக்கு கல்யாணமாயிடும் பாத்துக்கோங்கோ" என்று பல்லிளித்தார். "இல்லைங்க இதே கோயில்ல வேற ஒரு பூஜ செய்யனும்னு வந்தோங்க" என்று சொல்லி தன் கையிலிருந்த ஜோதிடர் அளித்த சீட்டை நீட்டியதும்."தெரியல மா, வெளிய கேட்டுக்கோங்கோ" என்று சுருங்கிப்போன முத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டு அவர் வேலையை கவனித்தார். அருமையான ஒரு பிஸ்னஸ் கை நழிவிப்போனதின் வருத்தம் அவர் பேச்சிலும், சைகையிலும் நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் தேடிவிட்டு எப்படியோ அந்த கோயிலைக் கண்டு பிடித்தோம். அடுத்த நாள் காலை 8 மணிக்கே அந்த கோயிலுக்கு சென்றோம். அங்கிருந்த கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கிட்டத்தட்ட 60க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அவரவர் பிள்ளைகளுடன் அந்த சிறு கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர். இன்னமும் அந்த பூஜைக்கான செலவு என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. சிறிது நேரம் கழித்து பூசாரி ஒருவர் வந்து "வந்திருக்கவா எல்லாரும் சீட்ட கொடுங்கோ.." என்றார். இவருக்கு எப்படி சீட்டு விவகாரம் தெரியும். திருச்சி கோயிலிலுள்ள பூசாரிக்கு சென்னை அமிஞ்சிக்கரையிலுள்ள ஜோசியர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று வியப்பில் நான் இருந்த போது தான் எல்லோரிடமும் அப்படி ஒரு சீட்டு இருப்பது தெரிந்தது. எல்லா சீட்டுகளும் வெவ்வேறு அளவுகளில், நிரங்களில் இருந்தன. அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு 5 அல்ல 6 ஜோதிடர்களிடம் இருந்து பெற்றவை என கணிக்க முடிந்தது. என் அம்மா பார்த்த ஜோதிடர் கொடுத்த சீட்டு போலவே 6 அல்ல 7 சீட்டுகள் பார்த்த ஞாபகம். திருச்சியிலிருக்கும் பூசாரிகளுக்கும் இன்னும் பல ஊர்களில் உள்ள ஜோதிடர்களுக்கும் இருக்கு தொடர்பை இது காட்டியது. அதுவும் கொடுமை என்னவென்றால் அந்த பூஜைக்காக அவர்கள் பெற்ற ஃபீஸ்(காணிக்கை - ஃபீஸுக்கு இடப்பட்டிருக்கு டீஜண்டான பெயர்) தலைக்கு ரூ 4000. உயிர் போய் உயிர் வந்தது எனக்கு. அந்த பூஜைக்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே கோயில்களில் சாதாரணமாக கிடைக்கக் கூடியவையே. அதற்கு அவர்கள் பெரிதாக பணம் ஏதும் செலவு செய்யப் போவதில்லை என்று தெரிந்தது. தலைக்கு ரூ 4000 என்று பார்த்தால் அன்றைய வசூல் மட்டும் ரூ 2,40,000 (60 பேருக்கு - கணக்கு சரி தானே. நான் குமாரசாமி இல்லை !!!). என்ன பகல் கொள்ளை இது.

பூஜைக்கு வந்திருந்த பெண்கள்/ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவே தெரிந்தனர். 25 வயதுக்கு உட்பட்ட பெண்/ஆண் திருமணமாகவில்லை என்று பரிகாரம் செய்யச் சொல்லி அனுப்பியிருக்கும் ஜோதிட ஏஜன்டுகளின் கரிசனத்தை என்னவென்று சொல்ல. அவர் தாராளமாக அந்த பெண்ணை பெற்றவர்களிடம் "தினம் கடவுளை வணங்கி நம்பிக்கையோடு இருங்கள், பெண்ணுக்கு வயதிருக்கிறது" என்று சொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாமே. அகப்படும் அனைத்தையும் வைத்து தொழில் செய்தால் தானே முன்னேர இயலும் (உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டு) என்று வருபருக்கெல்லாம் ஏதாவது ஒரு கோயிலுக்கு சீட்டெழுதி கொடுத்துவிடுகிறார் கடவுளின் முதல் ஏஜென்ட். இரண்டாம் ஏஜென்டான கோயில் பூசாரி அந்தச் செயலை முடித்து வைத்து ஆண்டவனுக்கு இவர்களின் துனபத்தை தெரிவித்துவிட்ட திருப்தியுடன் வழியனுப்பி வைக்கிறார். அதற்கு பின் தான் பண பட்டுவாட இரு ஏஜென்டுகளுக்கும் இடையே நடந்து முடிகிறது. பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் நடக்கப் போகும் நிகழ்வுக்கு இந்த விரையம். நடந்துவிட்ட பின் "பன்ன பரிகாரத்துக்கு நல்ல வழிய காட்டிட்டான் அந்த கடவுளு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். இந்த மக்களே பின்பு இந்த ஏஜென்டுகளை இலவசமாக விளம்பரம் வேறு செய்து தருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் பூஜை துவங்கும் முன்னமே கிளம்பி நாங்கள் தங்கியிருந்த விடுதியை அடைந்தேன். இப்படி ஏன் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்று அந்த இரு ஏஜென்டுகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

ஒன்று மட்டும் உண்மை...

கடவுள் இல்லையென்று சொல்லும் என்னைப் போன்ற நாத்தீகர்களை விடுங்கள், கடவுள் பெயரால் பகல் கொள்ளை அடிக்கும் இது போன்ற ஏஜென்டுகளை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வையுங்கள்.

- ராஜேஷ் சுப்பிரமணியன்.

அரசியல் கட்சிகளின் அரசியல்

சில நிகழ்வுகள் நம் எல்லோர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். பலரிடம் அந்த நிகழ்வுகளை குறித்து உரையாடுவோம், விவாதிப்போம் எனினும் விடை என்னவோ மீண்டும் ஒரு கேள்வி தான். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?. அந்த கேள்வியின் தொடர்ச்சியாக இன்னும் பல புதிய கேள்விகள் துளிர்த்து எழும். இந்த கேள்விகள் ஒரு சுழர்ச்சி போல கீழே வரும் மீண்டும் மேல் நோக்கி எழும். வேகம் அதிகமாகும் குறையும் ஆனால் சுழர்ச்சி நிற்காது. அரசியலில் அதுவும் தமிழக அரசியலில் நிகழும் பல நிகழ்வுகள் நம் சிந்தனையை இப்படி ஒரு கேள்வி சுழர்ச்சிக்குள் தள்ளுபவை தான். அந்த பல கேள்விகளுள் என்னை படு வேகமான ஒரு கேள்வி சுழர்ச்சியில் சுற்ற வைத்துக் கொண்டிருப்பது இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு சாமாணிய மனிதர்கள் அளிக்கும் ஈடு இணையற்ற ஆதரவு.

இந்த சந்தேகத்தை நான் எழுப்புகையில் பலருக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ அம்மாவை பற்றி தான். ஆம், அவரது பல வருட கால அரசியல் வாழ்வில் அவர் கடந்த பல தடைகளுள் அவர் இப்பொழுது கடக்கயிருக்கும் தடை மிக கடிணமானது. அவரது விடுதலை தேசிய அரசியலில் அவருக்கு இருந்த பலத்தை எடுத்துக்காட்டியது (விரிவாக விவரிக்க தேவை இல்லை என எண்ணுகிறேன்). தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பெரும் வியப்பை எனக்களிக்கவில்லை மாறாக அவர் மீது சாமாணியர்கள் காட்டும் அன்பு தான் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்படி நான் சொல்லும் போது பலரின் மனதில் எழும் ஐயம் என் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அது என்னவெனில் அம்மாவின் மீது அவர்கள் தொண்டர்கள் காட்டுவது அன்பா ? இல்லை அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமா ?.

அரசர்கள் காலத்து ஆட்சிக்கு பிறகு நாம் பல்வேறு அரசியல் தலைவர்களை கண்டிருக்கிறோம். காந்தி கையசத்து "அஹிம்சை முறையில் போராடுவோம்" என்றதும் கோடிக்கணக்கானோர் நாடு முழுவதும் அவர் பின்னே திரளாக சென்றனர். "இளைஞர்களே நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து ஆயுத போராட்டம் செய்யுங்கள். விடுதலையை நாம் பெருவோம்" என்றதும் அவர் பின்னும் பலர் சென்றனர், உயிர் தியாகம் செய்தனர். கர்ம வீரர் காமராஜரோ அவரின் எளிமையான திறமையான அரசியலின் மூலம் பலரின் மாண்பை பெற்றார். பல தொண்டர்கள் அவரை கடவுளாகக் கருதி பணி செய்தனர். பக்தவச்சலம், கக்கன், ராஜாஜி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த காலத்தில் அப்படி ஒரு நிலை உள்ளதா என்று எண்ணிப் பார்த்தால் பலர் எந்த தயக்கமுமின்றி இல்லை என்றே பதிலளிப்பார்கள். அப்படியென்றால் அரசியல் தலைவர்கள் மீது தொண்டர்கள் அன்பு காட்டுவது போல் நடித்து அவர்களுக்கு வேண்டியவற்றை அடைகின்றனர் என்றே தோன்றுகிறது. அனைவருமே பொய்யர்கள் என்று கூற இலயாது என்றாலும் பெரும்பாலும் பொய்யர்கள், சுயநலம் பிடித்தவர்களே.

இந்த மாற்றம் அரசியலில் அதுவும் நம் தமிழகத்தில் எப்பொழுது நடந்தது என்றே தெரியவில்லை. அது என்னவென்றால், இப்பொழுது அரசியல் கட்சிகளில் தொண்டர்களாக இருப்பவர்கள் "மாபெரும் கொலைகாரர்கள்", "திருடர்கள்" "ஏமாற்றுக்காரர்கள்" என்று பார்ப்பவர்கள் அனைவருமே தனக்கென்று ஏதோ ஒரு ஆதாயம் தேடியே அரசியல் கட்சிகளுக்குள் நுழைகிறார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்கவே இயலாது. ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் காட்சிகளை பிபிசி நேரலையில் ஒளிபரப்பியதை கண்டபோது வியந்தேன், அங்கு ஓட்டுச் சாவடிக்கு அருகே ஒரு சிலர் கூடி பேசிக் கொண்டிருந்தனர் அவர்களை பிபிசி பேட்டி எடுத்த போது அவர்கள் அளித்த சில பதில்கள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது. அவர்களில் சிலர் "ஜான் கெர்ரி" ஆதரவாளர்கள் சிலர் "ஜார்ஜ் புஷ்" ஆதரவாளர்கள் ஒரு சில சாமாணியர்களும் இருந்தனர். அவர்கள் வெளிப்படையாக போட்டியிடும் தலைவர்களை விமர்சித்தனர். ஆனால், யாரும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஒருவரிடம் இருந்து வந்த விமர்சனத்தை மற்றொருவர் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். இங்கோ ஒரு "ஏரியா கவுண்சிலர்" பற்றி விமர்சித்தாலே என்ன ஆகுமென்று அறியாதோர் இல்லை.

நம் நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் ஓட்டு பதிவாகும் சதவிகிதம் 60%ல் இருந்து 70% கடக்கத் திணறுவதைக் காணமுடிகிறது. ஓட்டு போடாதவர்கள் சோம்பேரிகள், இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையோ ஆர்வமோ எள்ளளவும் இல்லாதவர்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் ஒன்று தானே என்று கருதுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைமை சீர்கெட்டுப் போயிருப்பது உண்மை. அதன் விளைவாக தான் இப்பாடி எல்லம் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். அதற்காக அவர்கள் தொடர்ந்து செய்யும் செயல்கள் தான் இவை. நாட்டில் உள்ள அனைத்து கெட்டவர்களின் குடியிருப்பாகவே மாறிவிட்டது அரசியல் கட்சிகள் அவர்களை வைத்து தான் அரசியலே நடத்துகிறார்கள் அப்படி அவர்களை வைத்து அரசியல் கட்சி தலைவாகள் செய்வதென்ன?...இந்த நாட்டின் அரசியலில் நுழைந்து மக்களுக்கு நல்லது செதுய்விடுவோம் என்று எண்ணும் அனைவரையும் அடுத்த அடியையே எடுத்து வைக்க இயலாதவாறு முடக்குவேதே இவர்களது வேலையாக உள்ளது. மக்கள் மாற்றத்தை வேண்டி காத்திருக்கிறார்கள், இப்பொழுது தமிழ் நாட்டில் கோலோச்சும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை, நல்லது செய்ய விழியும் கட்சியை ஆதரிக்க தயாராகவே உள்ளனர் ஆனால், மாற்றாக தோன்றுபவர்களை வளர விட்டால் தானே மக்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டும். ஒரு செடிகயை வளர விடாமல் வெட்டி எறிந்தால் அவை எவ்வாறு மரமாகும்?. அதை தான் இந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் அவர்கள் தலைவர்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக உள்ளது.

ஆங்கிலத்தி "Mutual benefit"என்று சொல்லுவார்கள் அதாவது, உனக்கு ஒரு லாபம் எனக்கு ஒரு லாபம். அரசியலில் இப்பொழுது நிகழ்வதெல்லாம் இப்படிப்பட்ட ஆதாய பகிர்வுகள் தான். இதற்கு இந்நாட்டின் ஏழ்மையும் ஒரு முக்கிய காரணமாக அமைகறது. ஏழ்மையில் இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசிய்வாதிகள் மாறாக தவறான வழிகளைக் காட்டுகிறார்கள். அவர்கள் செய்து கொடுக்கும் சில வேலைகளில் கிடைக்கும் பணத்துக்கும் சிறு புகழ்ச்சிக்கும் நன்றியாக நடந்து கொள்கிறார்கள். இவர்களே இப்போதைய அரசியல் கட்சிகளின் எதிர்கால தூண்களாகம் மாறிப்போகிறார்கள். இவற்றை அம்மாவோ ஐயாவோ நேரடியாவா வந்து செய்ய இயலுமா ? இல்லை, இயலாதல்லவா. இப்படி சமூகத்தின் மேல் தங்களுக்குள்ள ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள சாமாணிய மனிதர்களையே பயன்படுத்துகின்றனர் அரசியல் கட்சிகளின் பெரும்புள்ளிகள். இப்படி அரசியல் கட்சிகள் சராசரி மனிதர்களை தூபம் போட்டு பெரும் கொலைகாரர்களாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவும் உருவாக்கி அவர்களுக்கு "நாய் பிஸ்கட்" போல் அவ்வப்போது சிலவற்றை தூக்கி போட்டுவிட்டு அவர்கள் அனைவரின் பெரும் துணையுடன் உச்சத்தில் உள்ளனர்.

மொட்டை போடுகிறார்கள், கோயில் கோயிலாக சென்று பூஜை செய்கிறார்கள், மண் சோறு உட்கொள்ளுகிறார்கள் இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். மேலிடத்தின் பார்வையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை விட இது வேறு எதையும் காட்டவில்லை. இப்பொழுது பெரும் தலைவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பெரும்பாலான தலைவர்களுமே பல வருடங்களுக்கு முன் சிறு சிறு ரவுடித்தனம் செய்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அப்படி இருக்கும் சிலர் நாளை இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களானால் அது ஒன்றும் பெரும் வியப்பை அளித்து விடாது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் போது எந்த துறையிலும் முழுமையான முன்னேற்றம் என்பது இருப்பது கேள்விக்குறி தான்.

- ஒன்று பணம் புகழ் என்று அங்கலாய்க்கும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும், அடுத்தக் நிலை தலைவர்களும் திருந்த வேண்டும்

- இல்லையேல் அரசியல் கட்சிகளால் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக அவர்களுடன் இணைந்து செயல்படும் சாமாணியர்கள் திருந்த வேண்டும்.


- அதுவும் நடக்காது போனால், வீணே அரசியல்வாதிகளை குறை கூறாது குறயுள்ள அரசியல்வாதிகளை எதிர்க்க நல்லவர்வள் அரசியல் செய்ய முன்வர வேண்டும்

இதில் ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் கூட நம் நாடு பிழைத்துக் கொள்ளும். இல்லையேல் ஒவ்வொரு முறை ஆதிக்க சக்திகளின் கொடுமை எல்லைகளை மீறும் போது மக்கள் புரட்சி வெடிப்பது போல் ஒரு புரட்சி இங்கும் வெடித்தால் தான் இதற்கெல்லாம் விடிவு காலம்.

நம் நாடு நல்வழியில் பயணிக்க அப்படியொரு புரட்சி தேவைப்படாது என்று அன்ழிவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம் மாற்றத்தை எதிர்நோக்கி.

- ராஜேஷ் சுப்பிரமணியன்