Sunday 12 February 2017

ஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் ?

அனைவருக்கும் ஒராங்குடானின் பணிவான வணக்கங்கள்

சில நாட்களுக்கு முன் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஓர் அடுக்கு மாடி கட்டடத்தில் வசித்து வந்த குடும்த்தில் உள்ள 7 வயது சிறுமியை ஒரு மிருகம் சிதைத்து பின் எரித்து கொன்றிருப்பது மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வானது. கேட்பவர்கள் நமக்கே இப்படி பதறுகிறதே, அந்த பிள்ளையை பெற்றவர்களும் உறவினர்களும் எப்படி கதறி இருப்பார்கள் ? இந்த பேரிழப்பிலிருந்தும், மன சோர்விலிருந்தும் அவர்கள் மீண்டு எழ நீண்ட காலமாகும்.



இது குறித்து இணையத்தில் குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக Facebook மற்றும் Twitterல் மக்கள் கொந்தளிப்போடு சில கேள்விகளை வைக்கின்றனர். அவை,

1. நிர்பயா, சுவாதி போன்றோருக்கு மட்டும் தான் பொங்குவீர்களா ?

2. நிந்தினி போன்ற கீழ் சாதி பெண்களுக்கு மட்டும் நீதி கேட்கும் கூட்டத்தை என்னவென்று சொல்ல ?

ஒன்று வாழ்க்கை தரம் & சாதி/மதம் சார்ந்த காரணத்தால் சில நிகழ்வுகள் மீடியாவின் பார்வையில் விழுந்து பின் மக்கள் கையிலெடுக்கும் ஒரு இணைய போராட்டமாக மாறுகிறது.

நல்லது தான்,  குற்றங்களைக் கண்டு மக்கள் கொதித்து எழுவதும் போராடுவதும் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று தான். ஆனால், பெரும்பாலான மக்கள் இதிலும் ஆட்டு மந்தைகள் போல் தான் இருக்கின்றார்கள் என்பது தான் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. ஏன் கீழ் சாதியில் அநீதி இழைக்கப்பட்ட ஒருவருக்கு குரல் கொடுத்த எவரும் இதற்கு கொடுக்கவில்லை அதற்கு கொடுக்கவில்லை என்று யாரோ சிலர் கேட்க துவங்கியதும் தானும் கூட்டத்தோடு கூட்டமாக கிளம்பி விடுகின்றனர் ஞாயம் கேட்க. அவர்களுக்கு சரியாக என்ன வேண்டுமென்று கூட தெரியாது. அவர்களுக்கென்று தெளிவான கருத்தும் அந்த நிகழ்வு குறித்து இருக்காது.

ஏன் நீதி கேட்கிறோம் :
மக்கள் ஏன் நீதி வேண்டுமென கேட்க வேண்டும் ?

நாட்டில் எத்தனையோ குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை பெற செல்லும் அரசு அலுவலகங்களில் கூட லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் பொங்காத மக்கள், நீதி கேட்காத மக்கள் இதற்கு மட்டும் ஏன் கேட்கின்றனர் ?

சரி விடுங்கள், Doordarshanல் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் ஆனாலும் நாம் தனியார் தொலைக்காட்சிகளைத் தானே பார்க்கிறோம். அது ஒரு பெரிய விவாதம், மனிதர்களின் உளவியல் சார்ந்த விவாதம், மிகவும் ஆழமாகச் செய்ய வேண்டிய விவாதம். இப்பொழுது அதற்குள் போக வேண்டாம்.

பொதுவாக நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுகின்ற போது தான் நீதி கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். சல்லிக்கட்டு, நந்தினியின் கற்பழிப்பு & கொலை போன்ற சம்பவங்களில் மக்கள் நீதி கேட்டதும் அதை வைத்து தான்.

நந்தினி & ஹாசினியின் கற்பழிப்பு/கொலையின் வேறுபாடுகள்:
நந்தினியின் கற்பழிப்பு & கொலை எப்படி சிறுமி ஹாசினியின் கற்பழிப்பு & கொலையிலிருந்து வேறுபட்டு நிற்கிறது ?

ஒரு குற்ற செயலுக்கு நீதி எப்பொழுதெல்லாம் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்த்தால் அது இரண்டே காரணங்களால் தான்,

1. பதவி/பணம்/செல்வாக்கு படைத்தவர்கள் குற்றம் இழைக்கும் போது

2. ஆதிக்க நிலையில் இருப்பகள் இழைக்கும் குற்றங்களில் (மதம், சாதி, இனம் என்று இதனை மேலும் வகைப்படுத்தலாம்)

நந்தினியை, காதலித்தவன் & அவனது நண்பர்கள் கூடி வன்புணர்வு செய்து பின் கருவறுத்து, புதைத்ததை மட்டுமே பார்க்க கூடாது, இந்த கொடூரத்தை நிகழ்த்த அந்த மிருகங்களுக்கு தைரியத்தை கொடுத்தது எதுவென்று சற்றே சிந்தித்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் ஏற்கப்படவில்லை (முதலில் கொடுத்த புகாரும் ஏற்கப்படவில்லை பின் இந்து முன்னணியின் மணிகண்டன் இதை செய்திருக்கக் கூடுமென்று புகாரளித்தும் காவல்துறை ஏற்கவில்லை), அந்த பெண்ணை தேடுவதற்கான சிறு முயற்சியை கூட காவல் துறை மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவத்தில் சில அதிகாரம் படைத்தவர்களின் கை இருப்பது அறிந்தே அவர்கள் கண்டுகொள்ளாது இருந்ததை தெள்ளத் தெளிவாக காட்டியது. அங்கு தான் சமூக செயல்பாட்டாளர்கள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். மற்றொரு திசையிலிருந்து வரும் அழுத்தம் காவல்துறையை செயல்பட வைக்கிறது. சில நாட்களில் நந்தினியின் பிணம் நிர்வாண நிலையில் கிடைக்கிறது.

இந்த சபவத்தில் நந்தினிக்கு நீதி வேண்டி போராடாமல் போயிருந்தால் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க இயலவில்லை என்று சில வருடங்கள் கழித்து காவல்துறை வழக்கை மூடி இருக்கு.

சிறுமி ஹாசினியின் கற்பழிப்பு & கொலை முற்றிலும் வேறுபட்ட சம்பவம். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறை விரைவில் கொலையை செய்த கொடூரனை கைது செய்கிறது. அவனை நீதி மன்றத்தில் நிறுத்துகிறது, அவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்குகிறது. இதில் நீங்களோ நானோ எதற்காக போராடப் போகிறோம் என்று தெரியவில்லை. கேட்டால் தண்டனைகளின் தீவிரம் அதிகரித்தால் தானே குற்றங்கள் குறையும் என்று மேலோட்டமாக கூட சிந்திக்காமல் ஒரு பதிலைச் சொல்லி விடுவர்.

அதை பற்றியும் பேசுவோம்....

கற்பழிப்பும் தண்டனையும்:
குற்றம் என்பதை குற்றமாகவே பார்ப்போம். கற்பழிப்பு என்ற உடனேயே நாம் வேறு நிலைக்கு சென்றுவிடுகிறோம். பெண்ணிற்கு இழைக்கப்படும் குற்றமென்றும், இதற்கு தகுந்த தண்டனையை வழங்காமல் விட்டால் இது நீடிக்குமென்று கிளம்பிவிடுகிறது ஒரு கூட்டம்.

மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சட்டங்கள் இயற்றி, குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை வகுத்ததே மனிதன் பண்பட்ட நிலையை அடைந்த பின் தான். அதற்கு முன் அவன் இலக்கணமற்ற காட்டுத்தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்திருக்கிறான். அதன் பின் இருந்த/தோன்றிய பல குற்றங்களை களையவும் மனிதன் சட்டம் மட்டுமில்லாமல் பிற மாற்றங்களையே பெரிதும் நம்பினான். உலகப் போர்கள் நடந்து கொண்டிருந்த காலங்களில் கூட சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் இருக்கவே செய்தன ஆனால், அவற்றை இன்னொரு போரின் மூலம் நாம் கட்டுப்படுத்தவில்லை மாறாக ஐ.நா சபையை நிறுவி இவ்வுலகம் மனிதன் நீடித்து வாழ உரியதாக மாற்றவில்லையா ? அது போல தான் குற்ற சம்பவங்களில் சட்டம் மட்டுமே அனைத்தையும் சரிகட்டிவிடுமென முடிவு செய்யாமல் மற்ற வழிகள் என்னவென்பதையும் காண வேண்டும். 

சரி, தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அப்படி நடக்கிறதா என்று கவனித்தீரா ?

நிர்பயா வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அந்த சம்பத்தில் வந்த தீர்ப்பு இந்த நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் வாழும் மனிதர்களுக்கு கூட தெரியும், ஆனால், அதற்கு பின் நிகழ்ந்த குற்றங்கள் என்னென்ன என்று அறிவீரா?

நிர்பயா கற்பழித்து கொலை செய்த வழக்கில் தீர்ர்பு கொடுத்த பின் நிறைய கொடூரமான கற்பழிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதே டில்லியில் ஹாசினியைவிட வயதில் சிறியவளான ஒரு பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றிருக்கிறான் ஒரு பாவி. இன்னும் பல கொடூர கற்பழிப்பு/கொலைகள் நிர்பயா சம்பவத்திற்க் பின் நிகழ்ந்துள்ளன. அந்த குற்றச் செயல்களை செய்தவர்கள் யாரும் இந்த குற்றத்தை செய்தால் எனக்கென்ன தண்டனை கிடைக்குமென்று தெரியாதவர்களா என்ன ? நன்றாகவே தெரியும். ஆனாலும் ஏன் செய்கிறார்கள் ?

தண்டனை என்ன என்பதை விடுங்கள், ஒரு குற்றம் இழைத்துவிட்டால் நாம் எளிதில் தப்பிவிடலாம் என்று எண்ணுவோர் இருக்கின்றார்களா இல்லைய ? அரசியல் பலம், பண பலம் & பதவி இதை எல்லாம் வைத்துக்கொண்டு நீதியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இன்னமும் ஒரு குற்றமும் செய்யாதவர் போல் இச்சமூகத்தில் நம்முடன் கையில் ரத்தக் கரை படிந்தவர்கள் எத்தனையோ பேர் உலவிக்கொண்டுள்ளனர்.

இன்று இணையத்தில் பொங்குவோருக்கு காரைக்காலில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கூட்டு வன்புணர்வு நினைவிருக்கிறதா என்று கூட தெரியவில்லை. எப்படி தெரியும் ? நீங்கள் தான் கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்து கும்மியடித்துக் கொண்டு இருக்கிறீர்களே. அந்த சம்பவம் மிகுந்த அரசியல் பலம் கொண்ட நாய்கள் கூடி செய்த செயல். அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட்டனரா அல்லது இன்னும் சுதந்திரமாக திரிகின்றனரா என்று யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. குற்றம் இழைத்தவனை முதலில் பிடித்தால் தானே தண்டனை கொடுக்க இயலும்.

உற்று நோக்குங்கள், நாம் அதிகரிக்க வேண்டியது தண்டனையையா அல்லது அதிகார பலமிருக்கும் திமிரில் குற்றம் செய்வோரை எப்படி அடக்குவது என்ற எண்ணத்தின் மீதான தீவிரத்தையா ? மக்கள் பொருப்பாக நடந்துகொள்ளும் ஒரு சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்கலாம். அது இன்னொரு பெரிய விவாதம். அதை நான் இங்கு எடுத்து பேச வேண்டாமென்று நினைக்கிறேன்.

இதையும் மீறி சிலர் கற்பழிப்பவனின் ஆணுறுப்பை அறுத்தெறிய வேண்டும், நடுத் தெருவில் தூக்கிலிட வேண்டும், கல்லாலடித்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்குள் இருக்கு மிருகத்தை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க பல கேவலமான வேலைகளை செய்யும் ஆதிக்க சக்திகளை நம்மால் வேரோடு பிடுங்கி எறிய முடியுமா ? அது நடக்காத வரை நீங்கள் தண்டிப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் செய்துவிடும் குற்றச் செயல்கள் & சில மனநிலை சீர்கெட்ட பைத்தியக்காரர்களாக மட்டுமே இருக்கும். ஆனால், குற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த ஆதிக்க சக்திகளை எந்த சட்டத்தாலும் தண்டித்துவிடவே இயலாது. அவர்கள் செய்யும் குற்றங்கள் உங்கள் பார்வைக்கே வராது. ஆனால், அவர்கள் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி பலர் நாசமாகிக் கொண்டு தான் இருப்பார்கள். கடுமையாக்கப்படும் தண்டனைகள் சிலரை மட்டுமே சென்றடையும்.

குற்றங்களை குறைப்பதெப்படி? :
குறை சொல்லும் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் ஒரு ஆண்/பெண் பொது வாழ்வில் ஈடுபடுவதை அனுமதிக்கிறீர் ? பின்பு அரசியல் & நிர்வாகத்தை பொறுப்புடன் ஏற்று நடத்தும் நல்லவர்கள் யார் ? அன்று இருந்த பொறுப்புணர்வு மக்களிடையே இப்பொழுது இருக்கிறதா ? 

அரசியல் & நிர்வாகத்தில் நல்லவர்கள் நிரப்ப வேண்டிய இடங்கள் காலியாகவே இருக்கின்றன. சமூக விரோதிகள் பார்த்தார்கள், அவ்விடங்களை தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும், பணம்/பதவி சம்பாதிக்கலாம் என்று தாங்களே நிரப்பிவிட்டார்கள். மதம், சாதி, பணம் என்று எத்தனையோ குழுக்களில் அந்த ஆதிக்க சக்திகள் அரசியலிலும் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கின்றனர். எப்படி குற்றம் செய்பவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் ?

அரசியலில் வேரிலிருந்து முன்னேறி செல்லப் போவது யாரென மக்கள் தீர்மாணித்து நல்லவர்களை அடிப்படையிலேயே ஆதரித்தால், வளர்த்தால், காத்தால் ஆதிக்க சக்திகளை பெருமளவு அடக்கிவிடலாம். பின்பு தண்டனைகள் சரியாக வழங்கப்படும், அச்சத்தில் பெரிதளவு குற்றங்கள் குறையும்.

சிலர் தன்னை அறியாது ஒரு வேகத்தில் செய்துவிடும் குற்றங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் & சமூகம் பிள்ளை வளர்ப்பில் காட்டும் ஆர்வம் மற்றும் அதில் புகுத்த வேண்டிய மாற்றங்களை பற்றி சிந்தித்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும். இப்பொழுதெல்லாம், உஷாரா இருந்துக்க, ஏமாளியா இருக்காத, எவனுக்கும் உதவாத, இப்படி எல்லாம் சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகளிடமிருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர் ? சமூகம் சிலவற்றை அணுகும் முறையை மாற்றினாலே நல்ல பல மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வர இயலுமென்பதை மக்கள் உணர வேண்டும்.

ஹாசினிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு சட்டம் கடுமையான தண்டனையை வழங்கிவிட்டால் பின்பு குற்றம் குறைந்துவிடும் என்று பேசுபர்கள் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்பது நலம். இவனை போன்றோரை தண்டனையை கடுமையாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தவே இயலாது. ஒரு நொடிப்பொழுதில் தனை இழக்கும் மனபிழற்சி (அப்படி என்றால் பைத்தியக்காரன் அல்ல) ஒருவனை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம். அப்பொழுது நாம் இதை செய்தால் தண்டனை கடுமையா இருக்குமென்று அவன் சிந்திக்க மாட்டான். பிள்ளை வளர்ப்பு, சமூக பொறுப்புடன் இயங்கும் மக்கள், நல்லாசிரியர்கள், நல்லவற்றை பேசும் உறவுகள் என்று இவையனைத்தும் சேர்ந்து கொண்டுவர வேண்டிய மாற்றமிது.

இதையெல்லாம் செய்துவிட்டால் குற்றங்கள் நடக்காமல் இருக்குமா என்று கேட்டால் நடக்கும் என்று தான் கூற இயலும். ஆனால், குற்றங்கள் பெருமளவு குறைந்துவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.




எல்லா குற்றங்களைப் பற்றியும் பேச வேண்டும், நீதி கிடைக்காது என்று தெரிந்தால் தொடர்ந்து நீதி கேட்க வேண்டும். ஆனால், குற்றங்கள் அனைத்திற்கும் தண்டனைகள் கடுமையாக்குதல் ஒன்றே தீர்வு என்று எண்ணி ஏமாந்துவிடாதீர்.



- நன்றி

- ஒராங்குடான்



Saturday 7 January 2017

வாழ்வின் தேடல்களும் புத்தகங்களும்



அனைவருக்கும் ஒரங்குடானின் பணிவான வணக்கம்.

இப்பதிவில் புத்தகங்களை நாம் வாசிப்பதினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி எனது பார்வையிலிருந்து எடுத்துரைக்க விழைகிறேன். வழக்கமாக புத்தகங்கள் படிப்பது நல்லது, பொது அறிவை வளர்க்கு, அது உங்கள் நண்பன் என்றெல்லாம் எப்பொழுதும் போல ஆழமாய் சிந்தித்து கூறாது, நுணிப்புல் மேய்ந்துவிட்டு நானும் சிறுவர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கிவிட்டேன் என்று பெருமிதம் அடைவர். இப்படிப்பட்ட (Stereotypeஆன) விளக்கங்களை கொடுப்பதனால் புத்தக வாசிப்பு என்பது துவக்கத்திலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டுவிடும் என்பதை உணராது.

1. தேடலின் துவக்கம்:

குழந்தைகள் பிறந்து அவர்கள் வாய்விட்டு பேச துவங்குவதற்கு முன்னதாகவே அவர்களிடம் நாம் பேச துவங்கிவிடுகிறோம். நாம் பேசும் போது நமக்கு பதிலளிக்காத இளம் பிள்ளைகளோடு உரையாடுதலுக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் ரத்தத்தில், மரபணுவில், உணர்வில் ஊறிப்போயிருக்கும் ஒரு மொழியினை அவர்கள் மூளைக்கு கொண்டு சென்று பேச்சை தூண்டவேயாகும். இதுவே குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் முதல் மிகப்பெரிய உளவியல்/மூளை பயிற்சியாகும்.

பிறந்ததிலிருந்தே குழந்தைகள் மூளையில் இருக்கும் ஒரே விடயம், "கேள்விகள்". அவர்கள் பார்ப்பவற்றில் எல்லாம் பல நூறு கேள்விகள் அவர்களிடம் இருக்கும். பேசும் திறன் தூண்டப்பட்டு அவர்கள் பேச துவங்கியதும் அக்கேள்விகளுக்கு விடைகளை நம்மிடம் பெற முயற்சிப்பார்கள். இது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு துவங்குகிறது ஒர் மனிதனின் தேடல்.
Image result for Book reading kid
சரியோ தவறோ அறியேன், என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் பிறவியிலேயே சில அடிப்படை குணங்களோடு தான் பிறக்கிறான். அந்த அடிப்படை குணங்களை பொறுத்தே அவனுடைய தேடல்களும் வேறுபடுகின்றன. அந்த குணங்கள் சார்ந்த தேடல்கள் பருவ நிலையை அடையும் பொழுது தீவிரமடைவதை கூர்ந்து கவனித்தால் நம்மால் உணர இயலும். குழந்தைகள்/சிறுவர்களாக இருக்கும் போது நாம், வளர்ந்த உலக அனுபவமுடையோரிடம் கேட்டுப் பெறும் தெளிவு, 12/13 வயதிற்கு மேல் சற்றே விரிவடைய துவங்கும். அங்கு தான் அவர்கள் தங்களின் தேடல்களுக்கான விடகளை பல கோணங்களில் பெறத் துவங்குகின்றனர். புத்தகங்கள் அத்தேடல்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.

2. கேள்விகள் & தொடர் தேடல்கள்:

மனிதன் வாழ்க்கையை ஒரே சொல்லில் அடக்கிவிட வேண்டுமென்றால் அதனை "தேடல்" என்ற ஓரே சொல்லில் அடங்கச் செய்துவிட இயலும். முன்பு சொன்னது போல் தேடல்களில் துவங்கும் வாழ்க்கை இறக்கும் வரை எதையோ ஒன்றை தேடிக்கொண்டே தான் முற்று பெறவும் செய்கிறது. நம்மில் கேள்விகள் எழுவது இயல்பு அதற்கான தேடல்கள், விடைகள் பெறுதல் போன்றவை நம் கையில் உள்ளது. தேடல்களின் வேகம் & நாம் பெறும் விடைகளை பொறுத்தே நம் வாழ்வின் இனிமையும் கூடுகிறது.

Image result for QuestionsImage result for Questions


3. புத்தகங்கள், கேள்விகள், விடைகள் & விடைகளுள் கேள்விகள்:
இவ்வளவு தூரம் நான்சொன்ன அனைத்தையுமே இப்பொழு சொல்லவிறுப்பவற்றுடுடன் இணைத்துப் பாருங்கள்.

புத்தகங்கள், உங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடைகள், அவ்விடைகளிலிருந்து எழும் பல கேள்விகள் & பல புதிய கேள்விகள் என்று எண்ணற்ற விடயங்களை தன்னுள் அடக்கிய ஒன்று.

மேலே நான் கூறியதை ஒரு எடுத்துக்காட்டுடன் காணும் போது எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

Image result for Books
என்னையே ஒரு எடுத்துக்காட்டாக கொள்வோம். சிறு வயதிலிருந்தே என்னுள் ஒரு மிகப் பெரிய கேள்வி இருந்தது. அது, மக்கள் "கடவுள்" என்ற ஒரு கற்ப்னை உரு & மதங்களின் மீது கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கை மீதான ஐயங்களே.

முதலில் நான் கடவுள் இல்லை என்று எண்ணவே இல்லை ஆனால், ஏன் மனிதனுக்கு கடவுள் வேண்டும், ஏன் பல்வேறு உருவங்கள், மதங்கள் வேண்டும் என்று சரியாக கோர்த்து விளக்க கூட இயலாதவாறு மனதில் கேள்விகள் சிதறிக்கிடந்தன. பெரியவர்களிடம் கேட்டால் ஒன்று "சாமி கண்ணை குத்திவிடும்" அல்ல ஏதொ புரியாத கதைகளை சொல்லி என்னை சமாளித்துவிடுவார்கள். வளர்ந்த பின்பு எனது கேள்விக்கான விடைகளை பலவற்றுள் சிறிது சிறிதாக கண்டேன். அவற்றுள் புத்தகங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. அத்தேடலை நான் புத்தகங்களின் வழியே நிகழ்த்திய போது என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் மட்டுமல்ல, பல புதிய விடயங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

புத்தகங்கள் அளிக்கும் விடைகளுள் கேள்விகளும் உண்டு. எ.கா - "மதங்களை, நாத்தீகம் எழுதுவோர் ஏன் இவ்வாறெல்லாம் குறை கூறுகின்றனர் ?". ஒரு புத்தகத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு விடையானது, அதன் தொடர்ச்சியாக ஒரு சில கேள்விகளையும் எழுப்பும். பின், அக்கேள்விகளுக்கான தேடல் துவங்கும். அதற்கு கிடைக்கும் விடைகளிலிருந்தும் பல்லாயிரம் கேள்விகள் எழும். ஆகாவே, மனிதன் வாழ்க்கையின் அடிப்படையான தேடல் எனும் ஓன்றை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள, தொரடர்ந்து அதற்கு தீனி போட்டு அதனை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள புத்தகங்கள் பெரிதும் உதவுமென்று நாம் உணர வேண்டும்.

நான் ஒரே ஒரு எ.கா தான் கொண்டு விளக்கினேன். இதையே நீங்கள் ஆரிவியல், புவியியல், மொழி, கலாச்சாரம், உணவு என்று எந்த ஒன்றையும் வைத்து ஒப்பிட்டு பார்க்க இயலும். சில பிள்ளைகள் சிறு வயதிலேயே தங்களுக்கு கனிதத்திலோ, மொழிகளிலோ, விளையாட்டிலோ அல்ல வேறு எதிலாவது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட வயது வரும் போது அவர்களை புத்தகம் வாசிக்கும் வழக்கத்திற்குள் கொண்டு வருவது பெற்றோர் & ஆசிரியர்களின் கடமை. பின்பு அவர்களின் தேடல் அவர்களை சரியான புத்தகங்களிடம் அவர்களை கொண்டு சேர்க்கும்.

தொடர்ந்து சிந்திப்பது, சிந்தனைய துண்டுவது போன்றவை மட்டுமே மனிதனை பண்பட்ட ஒருவனாகவும், வாழ்வை அணுகும் முறையை மேன்மையடையவும் செய்யும்.

பற்பல புத்தகங்களை வாசிப்பீர், அடுத்த தலைமுறையினரை புத்தகம் வாசிக்க ஊக்குவிப்பீர், வாழ்வை பொருள் பொதிந்த ஒன்றாக ஆக்குவீர் & வாழ்க்கை பயணம் முற்று பெறும் வரை புத்தகங்களோடு ஒரு மாணவனாகவே வாழ்வீர்.

வாழ்த்துக்கள்.

- ஒராங்குடான்