அனைவருக்கும் ஒரங்குடானின் பணிவான வணக்கம்.
இப்பதிவில் புத்தகங்களை நாம் வாசிப்பதினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி எனது பார்வையிலிருந்து எடுத்துரைக்க விழைகிறேன். வழக்கமாக புத்தகங்கள் படிப்பது நல்லது, பொது அறிவை வளர்க்கு, அது உங்கள் நண்பன் என்றெல்லாம் எப்பொழுதும் போல ஆழமாய் சிந்தித்து கூறாது, நுணிப்புல் மேய்ந்துவிட்டு நானும் சிறுவர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கிவிட்டேன் என்று பெருமிதம் அடைவர். இப்படிப்பட்ட (Stereotypeஆன) விளக்கங்களை கொடுப்பதனால் புத்தக வாசிப்பு என்பது துவக்கத்திலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டுவிடும் என்பதை உணராது.
1. தேடலின் துவக்கம்:
குழந்தைகள் பிறந்து அவர்கள் வாய்விட்டு பேச துவங்குவதற்கு முன்னதாகவே அவர்களிடம் நாம் பேச துவங்கிவிடுகிறோம். நாம் பேசும் போது நமக்கு பதிலளிக்காத இளம் பிள்ளைகளோடு உரையாடுதலுக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் ரத்தத்தில், மரபணுவில், உணர்வில் ஊறிப்போயிருக்கும் ஒரு மொழியினை அவர்கள் மூளைக்கு கொண்டு சென்று பேச்சை தூண்டவேயாகும். இதுவே குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் முதல் மிகப்பெரிய உளவியல்/மூளை பயிற்சியாகும்.
பிறந்ததிலிருந்தே குழந்தைகள் மூளையில் இருக்கும் ஒரே விடயம், "கேள்விகள்". அவர்கள் பார்ப்பவற்றில் எல்லாம் பல நூறு கேள்விகள் அவர்களிடம் இருக்கும். பேசும் திறன் தூண்டப்பட்டு அவர்கள் பேச துவங்கியதும் அக்கேள்விகளுக்கு விடைகளை நம்மிடம் பெற முயற்சிப்பார்கள். இது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு துவங்குகிறது ஒர் மனிதனின் தேடல்.
சரியோ தவறோ அறியேன், என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் பிறவியிலேயே சில அடிப்படை குணங்களோடு தான் பிறக்கிறான். அந்த அடிப்படை குணங்களை பொறுத்தே அவனுடைய தேடல்களும் வேறுபடுகின்றன. அந்த குணங்கள் சார்ந்த தேடல்கள் பருவ நிலையை அடையும் பொழுது தீவிரமடைவதை கூர்ந்து கவனித்தால் நம்மால் உணர இயலும். குழந்தைகள்/சிறுவர்களாக இருக்கும் போது நாம், வளர்ந்த உலக அனுபவமுடையோரிடம் கேட்டுப் பெறும் தெளிவு, 12/13 வயதிற்கு மேல் சற்றே விரிவடைய துவங்கும். அங்கு தான் அவர்கள் தங்களின் தேடல்களுக்கான விடகளை பல கோணங்களில் பெறத் துவங்குகின்றனர். புத்தகங்கள் அத்தேடல்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.
2. கேள்விகள் & தொடர் தேடல்கள்:
மனிதன் வாழ்க்கையை ஒரே சொல்லில் அடக்கிவிட வேண்டுமென்றால் அதனை "தேடல்" என்ற ஓரே சொல்லில் அடங்கச் செய்துவிட இயலும். முன்பு சொன்னது போல் தேடல்களில் துவங்கும் வாழ்க்கை இறக்கும் வரை எதையோ ஒன்றை தேடிக்கொண்டே தான் முற்று பெறவும் செய்கிறது. நம்மில் கேள்விகள் எழுவது இயல்பு அதற்கான தேடல்கள், விடைகள் பெறுதல் போன்றவை நம் கையில் உள்ளது. தேடல்களின் வேகம் & நாம் பெறும் விடைகளை பொறுத்தே நம் வாழ்வின் இனிமையும் கூடுகிறது.
3. புத்தகங்கள், கேள்விகள், விடைகள் & விடைகளுள் கேள்விகள்:
இவ்வளவு தூரம் நான்சொன்ன அனைத்தையுமே இப்பொழு சொல்லவிறுப்பவற்றுடுடன் இணைத்துப் பாருங்கள்.
புத்தகங்கள், உங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடைகள், அவ்விடைகளிலிருந்து எழும் பல கேள்விகள் & பல புதிய கேள்விகள் என்று எண்ணற்ற விடயங்களை தன்னுள் அடக்கிய ஒன்று.
மேலே நான் கூறியதை ஒரு எடுத்துக்காட்டுடன் காணும் போது எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
என்னையே ஒரு எடுத்துக்காட்டாக கொள்வோம். சிறு வயதிலிருந்தே என்னுள் ஒரு மிகப் பெரிய கேள்வி இருந்தது. அது, மக்கள் "கடவுள்" என்ற ஒரு கற்ப்னை உரு & மதங்களின் மீது கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கை மீதான ஐயங்களே.
முதலில் நான் கடவுள் இல்லை என்று எண்ணவே இல்லை ஆனால், ஏன் மனிதனுக்கு கடவுள் வேண்டும், ஏன் பல்வேறு உருவங்கள், மதங்கள் வேண்டும் என்று சரியாக கோர்த்து விளக்க கூட இயலாதவாறு மனதில் கேள்விகள் சிதறிக்கிடந்தன. பெரியவர்களிடம் கேட்டால் ஒன்று "சாமி கண்ணை குத்திவிடும்" அல்ல ஏதொ புரியாத கதைகளை சொல்லி என்னை சமாளித்துவிடுவார்கள். வளர்ந்த பின்பு எனது கேள்விக்கான விடைகளை பலவற்றுள் சிறிது சிறிதாக கண்டேன். அவற்றுள் புத்தகங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. அத்தேடலை நான் புத்தகங்களின் வழியே நிகழ்த்திய போது என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு விடைகள் மட்டுமல்ல, பல புதிய விடயங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.
புத்தகங்கள் அளிக்கும் விடைகளுள் கேள்விகளும் உண்டு. எ.கா - "மதங்களை, நாத்தீகம் எழுதுவோர் ஏன் இவ்வாறெல்லாம் குறை கூறுகின்றனர் ?". ஒரு புத்தகத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு விடையானது, அதன் தொடர்ச்சியாக ஒரு சில கேள்விகளையும் எழுப்பும். பின், அக்கேள்விகளுக்கான தேடல் துவங்கும். அதற்கு கிடைக்கும் விடைகளிலிருந்தும் பல்லாயிரம் கேள்விகள் எழும். ஆகாவே, மனிதன் வாழ்க்கையின் அடிப்படையான தேடல் எனும் ஓன்றை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள, தொரடர்ந்து அதற்கு தீனி போட்டு அதனை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள புத்தகங்கள் பெரிதும் உதவுமென்று நாம் உணர வேண்டும்.
நான் ஒரே ஒரு எ.கா தான் கொண்டு விளக்கினேன். இதையே நீங்கள் ஆரிவியல், புவியியல், மொழி, கலாச்சாரம், உணவு என்று எந்த ஒன்றையும் வைத்து ஒப்பிட்டு பார்க்க இயலும். சில பிள்ளைகள் சிறு வயதிலேயே தங்களுக்கு கனிதத்திலோ, மொழிகளிலோ, விளையாட்டிலோ அல்ல வேறு எதிலாவது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட வயது வரும் போது அவர்களை புத்தகம் வாசிக்கும் வழக்கத்திற்குள் கொண்டு வருவது பெற்றோர் & ஆசிரியர்களின் கடமை. பின்பு அவர்களின் தேடல் அவர்களை சரியான புத்தகங்களிடம் அவர்களை கொண்டு சேர்க்கும்.
தொடர்ந்து சிந்திப்பது, சிந்தனைய துண்டுவது போன்றவை மட்டுமே மனிதனை பண்பட்ட ஒருவனாகவும், வாழ்வை அணுகும் முறையை மேன்மையடையவும் செய்யும்.
பற்பல புத்தகங்களை வாசிப்பீர், அடுத்த தலைமுறையினரை புத்தகம் வாசிக்க ஊக்குவிப்பீர், வாழ்வை பொருள் பொதிந்த ஒன்றாக ஆக்குவீர் & வாழ்க்கை பயணம் முற்று பெறும் வரை புத்தகங்களோடு ஒரு மாணவனாகவே வாழ்வீர்.
வாழ்த்துக்கள்.
- ஒராங்குடான்